மடாலயங்கள்

இந்து தேச சரித்திரத்தில் அரசாங்கங்களை விட மடாலயங்கள் மேலான ஸ்தானம் வகித்து வந்திருக்கின்றன. துறவியின் முன்னிலையில் வேந்தனும் துரும்புபோன்று அடங்கி ஒடுங்கி இருந்து வந்தது தேச லட்சியத்தைத் தெளிவுறுத்துகிறது. மன்னர்களின் வைபவங்கள் தத்தம் மாகாணங்களோடு நின்று விட்டன. பரதகண்டம் முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது ஏதோ சில காலங்களிலேதான். ஆனால் சமய ஆசாரியர் அநேகரது தெய்வீக ஆதிக்கம் தேசமெங்கும் எக்காலத்திலும் பரவி வந்திருக்கிறது. சமுதாய வளர்ச்சிக்கும் தேச முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத நன்னெறிகள் யாண்டும் மடாலயங்களினின்று உபதேசித் தருளப்பட்டன. பண்டைக்காலம் தொடங்கி இப்புண்ணிய ஸ்தாபனங்கள் ஆற்றியிருக்கும் அரும்பணிகளை நீக்கிவிட்டால் பரதநாட்டில் பண்பு ஒன்றும் இல்லாது போய்விடும்.

தனியுரிமை

தனியுரிமை தேடுவது சுயநலம் படைத்த மக்களின் இயல்பு ஆகும். பிறப்பை முகாமையாகக் கொண்டும், தொழிலை ஏதுவாகக் கொண்டும் கற்ற கல்வியைக்க காரணமாக எடுத்துக்காட்டியும், சிலர் தங்களுக்காக வே வென்று அலாதியன பாத்தியதைகளைப் பாதுகாத்து வைத்துக்கொள்கின்றனர்.

புத்தர்

புத்தர் கடுந்தவம் புர்ந்து கொண்டிருந்தபோது மன்மதன் அவர் முன்தோன்றி அவரை மயக்கமுயன்றான். அது போழ்து புத்தர் என்செய்தார்? ஆசை என்னும் காற்று வீசும்போது அற்ப மனதையுடையவர் செடி கொடிகளைப் போன்று ஊசலாடுவர். கற்பாறை போன்று உறுதியான உள்ளத்தையுடையவர் முன் ஆசை என்னும் புயல்காற்று என் செய்யும்? மன்மதனால் மயக்கப்பட்டபோது புத்தர் செய்த தீர்மானம் சாதகர்களுக்குச் சந்ததமும் உயிர் ஊட்டவல்லதாகும். சிங்கம்போன்று அவர் கர்ஜித்த சபதமாவது:-"பரவத ராஜனாகிய மேரு தன் இடத்தைவிட்டு நகரலாம். அண்டங்களெல்லாம் நொறுங்கி ஆகாயத்தில் மறைந்து போகலாம். சூரியனும் ச்நதிரனும் நட்சத்திரங்களும் தத்தம் போக்கினின்று பிசகிவிடலாம், ஜகத்திலுள்ளள ஜீவர்களெல்லாரும் ஒரே மனப்பான்மை பெற்றிடலாம், சமுத்திரம் வறண்டு போய்விடலாம்--ஆனால் ஓ மன்மதா! நான் கொண்டுள்ள விரதத்தினின்று நீ என்னை அணுவளவும் அகற்ற முடியாது" என்றார்